மயிலாடுதுறையில் ஆளுனர் ரவிக்கு கருப்பு கொடி- போலீசார் விரட்டியடிப்பு
மயிலாடுதுறையில் தமிழக ஆளுனர் ரவிக்கு கருப்பு கொடி காட்டியவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆளுநர் ரவி மயிலாடுதுறை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கங்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கவர்னர் ரவிக்கு சாலையோரம் நின்று கறுப்புக்கொடி காட்டினார்கள். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கருப்பு கொடி காட்டியவர்களை போலீசார் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆனாலும் எந்தவித பிரச்சினையும் இன்றி கவர்னரின் கான்வாய் தருமபுரம் ஆதீன மடத்தை அடைந்தது. அங்கு ஆதீனம் பிரச்சார பயணத்தை பச்சைக்கொடி காட்டி ஆளுநர் ரவி தொடங்கிவைத்தார்