வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்க அரசு அனுமதி: பாஜக வரவேற்பு
வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளதை ஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்;
கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க அரசு அனுமதியளிக்காததற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி சென்னை பாரிமுனையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
திரையரங்குகள், டாஸ்மாக் கடைகளை திறந்தால் பரவாத கொரோனா, கோயில்களை திறந்தால் மட்டும் பரவுமா? என கேள்வி எழுப்பி, கோயில் திறப்பு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை எடுக்காவிட்டால், மக்களைக் கூட்டி போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தார்.
மேலும் விஜயதசமி விழா நாளை (அக்.15) வெள்ளியன்று வருவதால் கோயில் திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துகளும், நன்றியையும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.