கவர்னர் ஆகிறாரா பொன் ராதாகிருஷ்ணன்?

பொன் ராதாகிருஷ்ணன் கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வருவதால் கன்னியாகுமரி பாஜக தொண்டர்கள் உற்சாகம்

Update: 2022-04-17 11:48 GMT

தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019ல் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என வேகமாக தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே பாஜகவுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக குமரியை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு  ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்க்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பொன்.ராதாகிருஷ்ணனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துவிட்டு, தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரி மாநில ஆளுநராக நிரந்தரமாக நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதே சமயம் தெலங்கானா மாநிலத்தில் இல்லாவிட்டாலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி நிச்சயம் என பாஜக வட்டாரம் அடித்து கூறுவதால் குமரி பாஜக தொண்டர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News