சென்னையில் பாஜக மூத்த நிர்வாகி வெட்டிக்கொலை - பரபரப்பு

சென்னையில், பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி பாலச்சந்தரை, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-05-25 01:15 GMT

பாலசந்தர் 

சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர், வயது 30. இவர், பாரதிய ஜனதா கட்சியில், எஸ்.சி/எஸ்.டி. பிரிவின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். இவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதை அடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 7:50 மணியளவில், போலீசாரின் பாதுகாப்புடன் பாலச்சந்தர், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டீக்கடைக்கு சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் பாலச்சந்தரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதை பார்த்து, அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலச்சந்தை, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னைக்கு வரும் நிலையில், சென்னை மாவட்ட மூத்த நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News