துறையூர் நகராட்சி தேர்தலில் வினோத வேட்பாளர்கள்: தாய்- மகள் போட்டி
துறையூர் நகராட்சி தேர்தலில் அடுத்தடுத்த வார்டுகளில் வினோத வேட்பாளர்களாக தாய்- மகள் போட்டியிடுகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 24. இதில் 10 வது வார்டு உறுப்பினர் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற 23 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் படி 78 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
துறையூர் நகராட்சி 23 வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சரோஜா போட்டியிடுகிறார். 24வது வார்டு வேட்பாளராக போட்டியிட அ.தி.மு.க. சார்பில் சரஸ்வதி என்பவர் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக 23வது வார்டு வேட்பாளர் சரோஜாவின் மகள் நித்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 5ம் தேதிநடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 23வது வார்டு சரோஜா மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் 24வது வார்டு அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் சரஸ்வதியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த நித்யா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அரசியல் வினோதமாக தாய் 23வது வார்டிலும் அவரது மகள் அதற்கடுத்த 24வது வார்டிலும் போட்டியிடக்கூடிய நிலை துறையூர் நகராட்சி தேர்தலில் ஏற்பட்டு உள்ளது.