ரஃபேல் கைக்கடிகாரத்திற்கான பில், வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட அண்ணாமலை
ரஃபேல் கைக்கடிகாரத்திற்கான பில் மற்றும் வங்கி வரவு செலவு கணக்கு விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.;
அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் பில்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வியெழுப்பினர்.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, ரஃபேல் கைக்கடிகாரத்திற்கான பில்லை வெளியிடுமாறும் அவர் கூறி வந்தார்.
சென்னையில் இன்று இப்பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, இந்தியாவில் இரண்டு ரஃபேல் கைக்கடிகாரங்கள் தான் விற்கப்பட்டிருப்பதாக கூறினார். ஒரு கடிகாரம் தம்மிடமும், மற்றொரு கடிகாரம் மும்பையில் உள்ள நண்பரிடமும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் கைக்கடிகாரம் குறித்த பில் மற்றும் தனது வரவு செலவு கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் கேரளாவைச் சார்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரஃபேல் கடிகாரத்தை தாம் ரூ.3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் வெளியிட்டார்.
மேலும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரத்தையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.