ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.;
பைல் படம்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். இதனிடையே மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸை சந்தித்து பில்கேட்ஸ் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், பில்கேட்ஸ் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அனைவருக்குமான நிதி, பேமெண்ட்ஸ் சிஸ்டம், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் டிஜிட்டல் முறையில் கடன் ஆகியவை குறித்து மிக விரிவாக உரையாடல் அமைந்தது” என்று கூறியுள்ளார்.
பில்கேட்ஸ் சமீபத்திய வலைதளத்தில் எழுதிய பதிவில், இந்தியா போலியோவை ஒழித்துள்ளது, எச்ஐவி தொற்றை குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழ்மையை குறைத்துள்ளது. மேலும் சுகாதாரத்தில் நிதிச் சேவையிலும் நல்ல வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. பூமியில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் போலவே, இந்தியாவிலும் வளங்கள் குறைவாக உள்ளன.
ஆனால், அந்தத் தடையை மீறி எப்படி முன்னேற முடியும் என்பதை இந்தியா நமக்குக் காட்டியுள்ளது. நாம் இணைந்து ஒன்றாகச் செயல்பட்டால், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி, அதே நேரத்தில் உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.