சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த பெங்களூரு நீதிமன்றம்
சிறையில் சொகுசு வசதிகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிபதி ராதாகிருஷ்ணன் பிடிவாரண்ட் போட்டு உத்தரவு பிறப்பித்தார்.;
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா சொத்து வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்து வசதிகளை பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு ஒன்றை கர்நாடகா அரசு அமைத்தது.
இந்த குழு அளித்த அறிக்கையின்படி சிறையில் சில சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் ஆனால் பணம் கைமாறியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பெயரும், பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளான டாக்டர் அனிதா, சுரேஷ் மற்றும் கஜராஜ், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெயரும்சேர்க்கப்பட்டிருந்தது.
முதல் வாய்தாவுக்கு ஆஜரான சசிகலா தரப்பு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டுக் கொண்டது. இதன்படி லோக் ஆயுக்தா நீதிமன்றமும் நேரில் ஆஜராக விலக்கு அளித்ததுடன் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டது. ஆனால் அதன்பிறகு ஒரு வாய்தாவுக்கு கூட சசிகலா நேரில் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராகாததை பார்த்த நீதிபதி ராதாகிருஷ்ணன் இரண்டு பேருக்கும் பிடிவாரண்ட் போட்டு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இருவருக்கும் ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.