புதுச்சேரியில் கரை ஒதுங்கும் உயிரினங்கள்: பயந்து நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்
புதுச்சேரியில் கடல் நிற மாற்றத்தால் கரை ஒதுங்கும் உயிரினங்களால் சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து புதுச்சேரி வரை கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் கடல் நீர் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படுறது. அலைகளும் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது.
கடல் நீர் தொடர்ந்து மாறிவரும் நிகழ்வுகளால் பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி அதனுடைய அழுக்குகள் கரை ஓரத்திலும் படிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கரையில் கால் வைப்பதற்கும் தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது புதுச்சேரி கடற்கரை பகுதியில் காணப்பட்டு வருகிறது. மேலும் பெரிய வட்ட வடிவிலான ஜெல்லி மீன்கள், திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் கரை ஓரத்தில் இறந்து கிடைக்கின்றன. இதனால் கடலில் குளிப்பவர்கள் மீது ஜெல்லி மீன்கள் ஒட்டுவதால் தழும்பு மற்றும் அரிப்பு ஏற்படுவதாகவும் கடற்கரை பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கடல் பாம்பு உயிருடன் கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியதால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயத்துடன் அந்த பாம்பை பார்த்தனர். இந்த பாம்பு கொடிய விஷம் உள்ள பாம்பு என்றும், இதற்கு மருந்து இல்லை எனவும் கூறப்படுகிறது.
புதுச்சேரி கடற்கரையில் திடீர் இந்த கடல் நீர் மாற்றத்தாலும் திடீரென கடல் உள் வாழின உயிரினங்கள் கரை ஒதுங்குவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் அச்சமடைந்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் பெரும் இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துமா என கேள்வியை எழுப்பியுள்ளது.