'நிழலாக அல்ல நிஜமாக இருங்கள்' -தி.மு.க.பெண் மேயர்களுக்கு கனிமொழி அட்வைஸ்
‘நிழலாக அல்ல நிஜமாக இருங்கள்’ - என தி.மு.க.பெண் மேயர்களுக்கு கனிமொழி அட்வைஸ் அளித்து உள்ளார்.;
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் 'பெண் மொழி' என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி மேயர்கள் பெண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் மேயர்கள் சரியான முறையில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். பெண்கள் சரியான முறையில் பணியாற்ற கூடிய திறன் கொண்டவர்கள். சில நேரங்களில் ஆண்களை விடவும் சிறப்பாக பணியாற்ற கூடிய தகுதி உங்களுக்கு உண்டு. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை நீங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். கணவர் இருக்கிறார் மகன் இருக்கிறார் அண்ணன் இருக்கிறான் என்று விட்டுவிடக்கூடாது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு பொறுப்புக்கு வந்துள்ள நீங்கள் அந்த பொறுப்பில் நிழலாக இல்லாமல் நிஜமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். பெண் மேயர், கவுன்சிலர்கள் எப்படி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பது பற்றிய சிறப்பு கருத்தரங்கு விரைவில் நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.