இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டிய அடிப்படை விஷயங்கள்
இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கற்று தர வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்த தகவல்கள்
கொரோனா தொற்று பலரது வாழ்கை முறையை அப்படியே மாற்றி போட்டுள்ளது. காலை எழுந்து அலுவலகத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்ப முடியும் என்றிருந்த நிலை பலருக்கும் மாறி, வீடே பலருக்கு அலுவலகமாகி விட்டது. அதே போல பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் அடியோடு மாற்றி விட்டது. இந்த பெருந்தொற்று. கொரோனா பரவலின் வீரியம் தற்போது குறைந்திருப்பதால் ஒருசில வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள வகுப்பு குழந்தைகள் வழக்கம் போல ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று செய்து வருகின்றனர். முன்பெல்லாம் எப்போதாவது கேம்களை விளையாடவோ அல்லது பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை பார்க்கவோ மட்டுமே சிறு குழந்தைகளின் கையில் இருந்த இன்டர்நெட் இப்போது பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வசம் இருக்கிறது. ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகளில் பங்கேற்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், தொற்று அபாயம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகம் வெளியே அழைத்து செல்லாமல் இருப்பது, அருகிலிருக்கும் சக குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமல் இருப்பது உள்ளிட்டவையும் காரணமாக இருக்கின்றன.
இதனால் பள்ளி வகுப்பு நேரங்களை தவிர தங்களது பொழுதுபோக்கிற்காகவும் ஆன்லைனில் நேரத்தி செலவழித்து வருகிறார்கள் ஏராளமான மாணவ குழந்தைகள். குழந்தைகளை பொறுத்த வரை தாங்கள் பார்க்க அல்லது விளையாட நினைப்பதை கொடுக்கும் ஒரு நண்பனாக தான் இன்டெர்நெட்டை பார்ப்பார்கள். எனவே அதிலிருக்கும் ஆபத்துகள் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.
எனவே இன்டர்நெட்டை பாதுகாப்பாக மற்றும் பொறுப்புடன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பெரியவர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். இன்டர்நெட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி தருவதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
- எப்போதுமே தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக முழு பெயர், வீட்டு முகவரி, இமெயில் ஐடி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை தவறியும் ஷேர் செய்ய கூடாது என்பதை முதல்படியாக சொல்லி கொடுங்கள்.
- அவர்கள் பயன்படுத்தும் எந்த ஒரு வெப்சைட் / ஆப்ஸில் privacy settings எங்கு உள்ளன என்பதை குறிப்பிட்டு, அவற்றை ஹையஸ்ட் செட்டிங்கில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள். சிஸ்டம், லேப்டாப், டேப், ஸ்மார்ட் போன் என அவர்கள் எந்த டிவைஸை பயன்படுத்தினாலும் இதை தவறாமல் பின்பற்ற கூறுங்கள்.
- சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும் எந்த ஒரு விஷயமும் அவர்கள் டெலிட் செய்து விட்டாலும் கூட, ஏதோ ஒரு மூலையில் என்றென்றும் அழியாமல் இருக்கும் என்பதை அவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுங்கள். அவர்களுடைய போட்டோ அல்லது வீடியோக்களை அப்லோட் செய்யும் முன் நன்கு சிந்தித்து செயல்பட சொல்லுங்கள்.
- பெற்றோரைத் தவிர வேறு யாருக்கும் பாஸ்வேர்டுகளை கொடுக்க கூடாது. ஆன்லைனில் யாராவது பாஸ்வேர்டுகளை கேட்டால், உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த எச்சரிக்கை செய்யுங்கள்.
- ஆன்லைனில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை புரிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆன்லைன் மூலம் பழகும் நபர் நேரடியாக சந்திக்க அழைத்தால், அந்த தகவலை உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்
- சைபர்புல்லிங்க் பற்றி அவர்களுக்கு விரிவாக எடுத்து கூறுங்கள். ஆன்லைன் மூலம் யாரேனும் அவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தால் அல்லது மனரீதியாக டார்ச்சர் செய்தால் உடனடியாக வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் சொல்ல சொல்லுங்கள்.
- அசௌகரியம் அல்லது சங்கடம் தரும் விஷயம் எதையாவது ஆன்லைனில் பார்த்தால் அல்லது காதால் கேட்டால் உடனடியாக அதை க்ளோஸ் செய்து விட்டு, நீங்கள் பார்த்த அல்லது கேட்டவற்றை பற்றிய விவரங்களை பெரியவர்களிடம் தெரியபடுத்துங்கள் என்று சொல்லி வையுங்கள்.