அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள்.. ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.;
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவதையும், மையங்களின் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான வளர்ப்புச் சூழலை வழங்குவதையும் உறுதி செய்வது என்பது அரசினுடைய முக்கிய கடமையாகும்.
இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாகச் செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர்களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய அங்கன்வாடி மையங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது என்பது மிக முக்கியமானதாகும். இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அளவிடவும், அம்மையங்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நல்வழி படுத்திட வழிவகை செய்வதுடன் இதனால் பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி அங்கன்வாடி மைய கட்டட நிலை:
கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கழிப்பறை வசதி:
அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் உள்ளதனை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிருமி நாசினி தெளித்து பராமரிப்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.
தண்ணீர் விநியோகம்:
அங்கன்வாடி மையத்திற்குள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
புகையில்லா அடுப்பு:
அங்கன்வாடி மையங்களில் எரிவாயு கலன்கள் மூலம் உணவு சமைப்பதை உறுதி செய்ய வேண்டும். புகையில்லா சமையல் சுவாச பிரச்சனைகளை தடுக்கவும், ஆரோக்கியமான சூழலை பராமரிக்கவும் வழி வகுக்கும்.
அங்கன்வாடி மைய சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள்:
பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தை ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள் வர்ணம் தீட்டி இடம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல்:
3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உணவு உட்கொள்வது மற்றும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உறுதி செய்திடவும், அங்கன்வாடி மையங்களிலேயே குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் சத்து மாவு உட்கொள்வதை அவசியம் உறுதி செய்ய வேண்டும்.
முன்பருவ பள்ளி:
i) முன்பருவ பள்ளிகளுக்கு வருகை தரும் குழந்தைகளின் வருகை பதிவேட்டினை கட்டாயம் ஆய்வு செய்தல்
ii) குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை உறுதி செய்தல்.
iii) குழந்தைகள் விளையாடும் உட்புற விளையாட்டு வளாகத்தை கண்காணித்தும், தேவைக்கேற்ற உட்புற விளையாட்டு பயிற்சிகள்
அளிக்கப்படுவதை ஆய்வு செய்தல் வேண்டும்.
iv) மேலும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவும் வெளிப்புற விளையாட்டு கட்டமைப்புகளுக்கு ஏற்ற இட வசதி இருப்பதை உறுதி செய்தல்.
v) குழந்தைகள் நேர்த்தியாக உடையணிந்தும், அவர்களின் நகங்கள் சுத்தம் செய்து வெட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
vi) குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சியை சோதிக்கும் விதமாக அவர்கள் வண்ணங்களை பிரித்தறிதல் மற்றும் பாடல்கள் (Rhymes) கூறுவதையும் கேட்டு அறிதல் வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை எடை போடுவதற்கான நுட்பத்தை பணியாளர்கள் அறிதல் குழந்தைகளை துல்லியமாக பணியாளர்களுக்கு தெரியுமா என்பதை மதிப்பிட எடைபோடுவதற்கான சரியான நுட்பம், வேண்டும். மேலும், எடையிடும் பதியப்பட்டதா என்பதை ஆய்வு இயந்திரம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்த்து, வளர்ச்சி பற்றிய குறிப்பினை கண்காணிப்பு அட்டையில் செய்ய வேண்டும்.
உணவுப் பொருட்களின் இருப்பு நிலை:
சத்து மாவு இருப்பு தேவைக்கேற்றவாறு உள்ளதா என்பதையும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அக்மார்க் தரத்தில் உள்ளதா என்பதையும், சரியாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த பதிவேட்டினை பராமரித்தல்:
அங்கன்வாடி மையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவு மற்றும் அதுகுறித்த விளக்க கையேடு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் உணவு:
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவு பற்றிய விவரங்களை சேகரித்து. குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
தாய்மார்களுடன் சிறிது நேரம் உரையாடுவதும், மையத்தைப் பற்றிய அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ளுதல். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை அறிந்து அவ்வப்போது மையங்களின் தேவைகளை அரசிற்கு தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இந்நடவடிவக்கை தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதையும் உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாகடிதம் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவித்துள்ளார்.