ஆசிரியர் மனசு திட்ட பதிவின் அடிப்படையில் உடனடி பணி நியமன உத்தரவு

ஆசிரியர் மனசு திட்ட பதிவின் அடிப்படையில் உடனடி பணி நியமன உத்தரவினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறப்பித்து உள்ளார்.

Update: 2022-09-22 10:40 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் அமைச்சரவையில் பள்ளிக் கல்வி துறை அமைச்சராக  இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தி.மு.க. நிறுவன தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை அன்பில் பொய்யாமொழியை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக அன்பில் குடும்பத்தாரின் அரசியல் பணி அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம்  தொடர்கிறது.

பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக தனக்கென ஒரு தனித்துவத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மாவட்டந்தோறும் முன்னறிவிப்பின்றி சென்று பள்ளிகளைப் பார்வையிட்டு அங்கு உள்ள உண்மைச் சூழலைப் புரிந்து கொண்டு பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தேவையான உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்கின்றார்.ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சி மூலம் ஆசிரியர்களையும்,பள்ளிகளில் நேரடியாக மாணவர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் ,தன்னைச் சந்தித்து கோரிக்கைகள் கொடுக்க நினைக்கும் ஆசிரியர்கள் யாரும் தனக்கான காத்திருக்க வேண்டாம் என்பதற்காக ஆசிரியர் மனசுப் பெட்டியை அலுவலகத்திலும்,இல்லத்திலும் வைத்த கையோடு,நேரில் தேடி aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.comஎன்ற இரண்டு மின்னஞ்சல் முகவரி வழியாக கோரிக்கைகளை அனுப்புங்கள்.மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற அடுத்த அறிவிப்பை வெளியிட்டதுடன் ஆசிரியர் மனசு அலுவலகத்தையும் திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் திறந்து வைத்தார்.


ஆசிரியர் மனசு திட்டத்தை தனது நேரடிக் கண்காணிப்பில் செயல்படுத்தி வருகின்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆசிரியர் மனசில் வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அதில் வரும் கோரிக்கைகளை உரிய அலுவலர்கள் மூலம் படிப்படியாக தீர்த்து வைத்து வருகிறார் அமைச்சர்.

ஆசிரியர் மனசு திட்டத்திற்கு இணையம் மூலமாக வந்த கோரிக்கைகளில் ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை பாடக்குறிப்பு எழுதினால் போதும், தமிழ்த் திறனாய்வு தேர்வை தள்ளி வைக்க வேண்டும், சென்ற ஆட்சியில் நிறுத்தப்பட்ட பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதற்கான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்து அசத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் சிலர் மின் பாடப்பொருள் தயாரிப்பு, எண்ணும் எழுத்தும், மொழிபெயர்ப்பு, இல்லம் தேடிக் கல்வி கட்டகங்கள் தயாரிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மாற்றுப் பணியில் பணியில் இருந்து வருகின்றனர்.

இப்படி மாற்றுப்பணியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் பலர்  அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக இருப்பதால் அவர்கள் நடத்தும் பாடத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் மனசு பிரிவிற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. மாணவர்கள் நலன் சார்ந்த இந்த தகவல் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக பரிசீலனை செய்தார்.  இதனை தொடர்ந்து அமைச்சர் பிறப்பித்த உத்தரவின் பேரில் மாற்றுப் பணியில் பணியாற்றும்182 ஆசிரியர்களுக்குப் பதிலாக, இடைப்பட்ட காலத்தை ஈடுசெய்யும் வகையில் மூன்று மாத காலத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக 182 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளது தமிழக  பள்ளிக்கல்வித்துறை.

மேலாண்மை குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500 ரூ.10 ஆயிரம் , ரூ.12 ஆயிரம் என்ற வீதங்களில் ஊதியம் வழங்கப்படும்.

ஆசிரியர் மனசில் வந்த கோரிக்கைகள் மீதான அமைச்சரது அடுத்தடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால்,அமைச்சரை  வரவேற்கும் ஆசிரியர்கள் ஆசிரியர்  மனசுத்திட்டத்தையும் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.


இது தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில் முதல் அமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க .ஆட்சி அமைந்த பின்னர் அரசு பள்ளிகளுக்கு தனி மரியாதை கிடைத்து உள்ளது. வீட்டின் அருகில் அரசு பள்ளி இருந்தாலும் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளை தேடி சென்றவர்கள் எல்லாம் இப்போது தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து உள்ளது. தற்போது தமிழக அரசு பிறப்பித்து உள்ள அரசு பள்ளிகளில்6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பின்போது மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும் என்ற உத்தரவினால் அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளின் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் மனசு திட்டத்தின்  மூலம் ஆசிரியர்களாகிய நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை அப்படியே இணையத்தில் பதிவிட்டால் எங்களது இயத்தில் உள்ள தகவல் அப்படியே அமைச்சரின் கவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி நேரடியாக சென்று விடுகிறது. இதன் மூலம் எங்களது குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News