சுதந்திர தின விழாவில் திருச்சி மாநகராட்சிக்கு முதல்வர் வழங்கிய விருது

சுதந்திர தின விழாவில் திருச்சி மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

Update: 2023-08-15 14:53 GMT

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாநகராட்சிக்கான விருதினை மேயர் அன்பழகன் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

சிறந்த மாநகராட்சிக்கான விருதினை திருச்சி மாநகராட்சிக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 21 மாநகராட்சிகளிலும் சிறப்பாக பணிகள் நடந்து வரும் மாநகராட்சிக்கு தமிழக அரசு ஒரு விருதினை அறிவித்தது.

அந்த அறிவிப்பின்படி குடிநீர் விநியோகம், சுகாதார மேம்பாடு, சாலை பணிகள், மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்தல் உள்ளிட்ட 13 நிலைகளில் திருச்சி மாநகராட்சி பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளது. இதனை பாராட்டும் விதமாக திருச்சி மாநகராட்சி தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் குடிநீர் விநியோகம் மற்றும் நகராட்சி துறை நிர்வாகம் அறிவித்தது. இதற்காக ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் ரூ. 50 லட்சம் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் அதை முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா  உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் கையால்  விருது வழங்கப்பட்டுள்ள நிலையில்  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோருக்கு திருச்சி மாநகரில் வசிக்கும் மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News