தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீரர்கள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் காளை உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2023-01-15 05:47 GMT

அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு தொடங்கியது 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காளைகளை பரிசோதித்து அனுமதிக்க கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார், உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் உள்ளனர்.

காயம் அடைவோருக்கு முதல் உதவி அளிக்க சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 டாக்டர்கள், 50 நர்சுகள், உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயாராக உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் மது அருந்திவிட்டு பங்கேற்ற 4 வீரர்கள் உட்பட 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேரும், உடற்தகுதி பெறாத 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 

வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை காளை உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News