சிவாலயங்களில் இன்று ஆவணி பிட்டுத்திருவிழா

Temple News - தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் ஆவணி மூல நட்சத்திரமாகிய இன்று, பிட்டுத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

Update: 2022-09-05 04:18 GMT

சிவாலயங்களில் இன்று பிட்டுத்திருவிழா

Temple News -திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாய பிட்டுத்திருவிழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், பிட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது. 70ம் ஆண்டு பிட்டுத்திருவிழா இன்று மாலை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், இரவு 7 மணிக்கு, சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும் நடைபெறுகிறது. வந்தியம்மை சார்பில் பிட்டுக்காக, சிவபெருமான் மனித உருவில் வந்து மண் சுமந்த காட்சி, பாண்டியன் பிரம்பால் அடிப்பது போன்ற காட்சிகள் நிகழ்த்தப்படுகிறது. மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பிட்டுக்காக மண் சுமந்து பிரம்பால் அடி வாங்கிய சிவன்

மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில், ஓயாத பெருமழை பெய்து, வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னன் கட்டளை இட்டார். மன்னனின் கட்டளைப்படி, இப்பணி பகிர்ந்தளிக்கப்பட்டது. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி ஒருவருக்கும், வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியை பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. சிவனிடம் முறையிட்டார் வந்தி.

ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே, சிவபெருமான் கூலிக்காரன் வடிவில் வந்தார். கூலி தர, தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறினார். உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை, தான் செய்வதாக கூறி, பிட்டு உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.

'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்பதால், அது பிட்டு சாப்பிட்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த சிவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்து துாங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த, பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச்  செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே, அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார்.


சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான்.

உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும். 

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பிட்டுத்திருவிழா

இன்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சென்னிமலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்க ப்பட்டு மாலை 3.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாச நாதர், அலமேலுமங்கை மற்றும் வள்ளி தெய்வானை யுடன் சுப்பிரமணியசுவாமி தேரில் அருள் பாலிக்கிறார். இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கிறது.

இதேபோல் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு கோவில்களில், ஆவணி மாத பிட்டுத்திருவிழா இன்று நடக்கிறது.

பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு, 17ம் ஆண்டு ஆவணி மூல பிட்டுத்திருவிழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மாலை, 5:00 மணிக்கு மகா அபிேஷகம், 5:30 மணிக்கு அலங்காரதீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா; மாலை, 6:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கிணத்துக்கடவு சிவலோகநாதர், சிவலோகநாயகி அம்மன் கோவிலில், 11ம் ஆண்டு ஆவணி மாத பிட்டு திருவிழா இன்று நடக்கிறது.விழாவை முன்னிட்டு, இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை வேள்வி பூஜையும், மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை பிட்டுத்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முடிவில், அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவபக்தர்கள், ஆவணி பிட்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News