தமிழக மீனவர்களை சுட்ட இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு

தமிழக மீனவர்களை சுட்ட இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கினை தமிழக போலீசார் பதிவு செய்து உள்ளனர்.

Update: 2022-10-23 10:14 GMT
இந்திய கடற்படை கப்பல் (பைல் படம்).

தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தான் அடிக்கடி தாக்குவது உண்டு. துப்பாக்கி சூடும் நடத்தி இருக்கிறார்கள். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் இதுவரை எண்ணற்ற தமிழ் மீனவர்கள் உயிர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் தமிழக மீனவர்களின் உயிர்ப்பலி என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இப்பொழுது இந்திய கடற்படை தமது சொந்த நாட்டு பிரஜைகளான மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் (வயது 35) செல்வகுமார் (45), செல்லத்துரை (45), கண்ணன்( 40),மோகன்ராஜ் (35), விக்னேஷ் (28) மகேந்திரன் (33) பிரசாத் (25) சுதீர் (29)பாரதி (26) ஆகிய 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ. என். எஸ். பங்காரா என்ற கப்பல் இருந்து வந்தது.10 மீனவர்கள் இருந்த மீன்பிடி படகு மீது இந்திய கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் தமிழக மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர் அந்த படகு மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் வீரவேல் மீது துப்பாக்கிக் கொண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் படகிலேயே சுருண்டு விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது .வீரவேலுடன் சேர்ந்த மற்ற மீனவர்கள் காயங்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் பற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர். நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்பது மீனவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் மீனவர் செல்வகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கடற்படையினர் மீது 324 (தாக்குதலில் லேசான காயம் ஏற்படுத்துதல்) 326 (தாக்குதலில் பெரிய காயம் உண்டாக்குதல்) 27 (1)துப்பாக்கி போன்ற ஆயுதம் பயன்படுத்தி தாக்குதல் நடத்துதல், 307 (கொலை முயற்சி) ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News