இளையராஜா திறமைக்கு அங்கீகாரம் - கொச்சைப்படுத்த முயற்சி: அண்ணாமலை வேதனை..!
இளையராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரத்தை கொச்சைப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்.பி.,யாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை, அவர் பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் இணைத்து கூறிய கருத்துடன் ஒப்பிட்டு பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பைப் பற்றிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அம்பேத்கரின் வாழ்வியல் சிந்தாந்தங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டிருப்பதாக ஒரு வார்த்தையை இளையராஜா கூறினார். இந்தக் கருத்தை பலரும், நியமன எம்பி விவகாரத்துடன் இணைத்து விமர்சிக்கின்றனர் என வேதனைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய இளையராஜா, கோவையில் அவரது பிறந்தநாள் விழாவில், தமிழக அரசை பற்றி கூட பேசியிருந்தார். மாநில அரசு நன்றாக பணி செய்வதாக கருத்து தெரிவித்தார். இவை எல்லாமே அவருடைய தனிப்பட்ட கருத்துகள். இதில் எதிலுமே அரசியல் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பார்வையை அவர் கூறுகிறார் என, அண்ணாமலை குறிப்பிட்டார்.
இளையராஜாவின் தனித்திறமைக்கு கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த தமிழக எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள், இது மிகவும் வேதனையாக இருக்கிறது. சாதி, மதத்திற்குள் அடைக்கக்கூடாத ஒரு மாமனிதன் இளையராஜா எனவும் தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.