அதிகாரிகள் மீது தாக்குதல்: திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

அதிகாரிகள் மீது தாக்குதல் தொடர்ந்தால் மோசமான எதிர்விளைவுகள் இருக்கும் என திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-22 08:20 GMT

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்பு படம்).

அதிகாரிகள் மீது தாக்குதல் தொடர்ந்தால் மோசமான எதிர்விளைவுகள் இருக்கும் என திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சி மாவட்டத்தில், சொத்து அடமானம் வைத்து வங்கியில் பெற்ற கடனைத் திரும்ப செலுத்தாத காரணத்தினால், கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற திருச்சிராப்பள்ளி (மேற்கு) மண்டல துணை வட்டாட்சியர்  பிரேம்குமார் மீது, கடந்த 18.10.2023 அன்று, அமைச்சர்  நேருவின் வலதுகரமான திமுக பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் உள்ளிட்ட சுமார் 15 முதல் 20 நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில், அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களிலும், பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சருக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள் என்பதால், குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் இருவரையும் இதுவரை கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசு அதிகாரிகள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. மணல் திருடர்களைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பல அலுவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்கிறது. அரசு அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன ஆகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

உடனடியாக, பாதிக்கப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் கூறிய புகாரில் தெரிவித்துள்ளவாறு, தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சர் நேருவின் வலதுகரமான திமுக பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் அரசு அதிகாரிகள் மீது இது போன்ற திமுகவினரின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மோசமான எதிர்விளைவுகள் இருக்கும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News