அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம்: சட்டம் நிறைவேறியது

தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே தமிழ்நாடு அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது

Update: 2023-01-13 09:06 GMT

தமிழக அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டது.

2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, பணியாளர் தேர்வுக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

Tags:    

Similar News