கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
சிதம்பரத்தில், டிச. 19ம் தேதி தேரோட்டமும் , 20ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நடராஜர் கோயிலில் உள்ள கொடிமரத்தில் ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றி துவக்கி வைத்தார். 11 நாள் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில், 19ஆம் தேதி தேரோட்டமும் 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, டிசம்பர் 15ஆம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடியேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனிடையே, தீட்சிதர்கள் தரப்பில் சிலர், ஆருத்ரா தரிசன கொடியேற்று விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சமூகவலைதளத்தில் நேற்று பதிவிட்டனர். இதனால், அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.