ஓசோனை பாதுகாக்கும் துளசி செடியால் இத்தனை சிறப்புக்களா?
ஓசோனை பாதுகாக்கும் துளசி செடியில் எத்தனை சிறப்புக்கள் என்பது பற்றி யோகா ஆசிரியர் விளக்கி உள்ளார்.;
ஆண்டுதோறும் ஏப். 22ல் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. உலக பூமி தினம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை காக்கும் வகையில் . ஒவ்வொருவரும் துளசி செடி வைத்து பராமரிப்போம்.துளசி மூலிகை செடியாகும். ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.இது கோயிலில் பூஜைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. துழாய், துளவம், மாலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி என வேறு பெயர்களும் இதற்கு உள்ளன.
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி , காட்டுத் துளசி என பல வகைகள் உள்ளன.இந்துசமயத்தில் துளசி வழிபாடு முக்கியமாக கருதப்படுகிறது.
அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை ஆகும்.
இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டி போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்தினால், உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும்.தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது.
துளசி மணி மாலை அணியும் போது அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி ஆகும்.
அனைத்து தாவரங்களுமே பகலில் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.எனவே ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்ப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்றார்