மீண்டும் சீறும் அண்ணாமலை- பதுங்குகிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

மீண்டும் சீறிப்பாயும் அண்ணாமலை- பதுங்குகிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

Update: 2022-03-18 14:49 GMT

தமிழக அரசியலில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ்.க்கும், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதலுக்கு காரணம் என்ன?. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு வரப்போகிறது. தரமற்ற ஒரு நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்க உள்ளது. ஆதலால் மக்கள் இப்போதே மின்வெட்டை சமாளிக்க இன்வெர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். கருவிகளை வாங்கி வைத்துக்கொள்ள தயாராகுங்கள் என ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவருக்கு அதிரடியாக ஒரு பதில் அளித்தார். அந்த பதிலில் அண்ணாமலை ஆதாரமற்ற வகையில் தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி உள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 24 மணி நேரத்தில் நிரூபிக்கவில்லை என்றால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர் கொடுத்த காலக்கெடுவான 24 மணி நேரமும் முடிந்து விட்டது. அண்ணாமலையும் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது மீண்டும் சீறிப்பாய்ந்து இருக்கிறார். இன்று அவர் அளித்த பேட்டியில் செந்தில் பாலாஜி தனது காவல்துறை மூலம் என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியோடு சிறைக்கு செல்வேன். சிறைக்கு சென்று விட்டு மீண்டும் வெளியே வந்ததும். இந்த அரசு மீதான ஊழல் பற்றி மக்களிடம் பேசுவேன் என்றார். மேலும் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் தான் இருக்கிறோம் என்றும் கூறினார்.

அதே நேரத்தில் இந்த பேட்டிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நேரடியாக பதில் அளிக்காவிட்டாலும் தனது ட்விட்டர் தளத்தில் 13,700 நாட்களில் 20 ஆயிரம் புத்தகங்களை படித்து இருந்தாலும் சில அதிமேதாவிகளுக்கு (அண்ணாமலை)புரிதல் இல்லை. பக்குவமும் இல்லை. என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசியலில் இரு துருவங்களாக இருந்தாலும் செந்தில் பாலாஜியும் அண்ணாமலையும் ஒரே மாவட்டம் அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மின்வெட்டுப் பிரச்சினையில் இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News