வியக்க வைக்கும் அதிசய கிணறு: பல ஆயிரம் கனஅடி மழைநீரை உள்வாங்கினாலும் நிரம்பவில்லை

வினாடிக்கு 50 கனஅடி என கிணற்றில் பல ஆயிரம் கன அடி மழைநீர் விழுந்தாலும், நிரம்பாமல் எல்லா உபரிநீரையும் உள்வாங்கிக் கொள்கிறது.;

Update: 2021-12-06 02:22 GMT

ஆயன்குளம் ஊரில் அமைந்துள்ள மழை நீரை உள்வாங்கும் அதிசிய கிணறு.

நெல்லையில் கடந்த பல நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது, இதுவரை நிரம்பாத குளம், குட்டை, ஏரிகள் அத்தனையும் நிரம்பிவிட்டது, கரையை தாண்டி செல்லும் அளவு தண்ணீர் ஓடுகிறது.. ஆனாலும் எவ்வளவு உபரி நீர் கொட்டினாலும் கிணறு நிரம்ப வில்லை என்று சொல்வதை கேட்க ஆச்சரியமாகத்தான் உள்ளது.


நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா குளங்களும் நிரம்பின. அந்த வகையில் திசையன்விளை அருகிலுள்ள ஆயன்குளம் ஆற்றுப்படுகை நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள கிணற்றுக்குள் சென்றது. ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் என தொடர்ச்சியாக பல நாட்கள் இந்த கிணற்றுக்குள் தண்ணீர் விழுந்தன. ஆனாலும் அக்கிணறு நிரம்பாவில்லை.

தொடர்ந்து தண்ணீர் கிணறுக்குள் கொட்டுகிறது, அவ்வளவு தண்ணீர் கிணற்றில் பாய்ந்தாலும் கிணறு நிரம்பவில்லை.. கிணற்று தண்ணீர் எங்கே போகிறது என்ற கேள்விக்கு விடையும் கிடைக்காமல் ஆச்சரியத்தையும், அதிசயத்தை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் இதை அதிசமாக பார்த்துச் சென்றனர்.


நம்பியாறு கால்வாய் பல்வேறு குளங்களை நிரம்பியது, அப்படி நிரம்பிய உபரி நீர் திசையன்விளைக்கு அருகில் உள்ள ஆயன்குளம் படுகையை நிரம்பிய பின்னர், தண்ணீர் வழிந்து படுகைக்கு அருகிலுள்ள இரண்டு அதிசய கிணற்றுக்குள் பாய்ந்து கொண்டே இருக்கிறது, ஆனாலும் நிரம்ப வில்லை.. அந்த கிணற்றில் செல்லும் தண்ணீர் எங்க போகுதுன்னே தெரியல? என்பதுதான் இந்தக் கிணற்றின் அதிசயம்.

குளங்களை நிறைத்த கால்வாய் நீரால் இந்த கிணற்றை நிரப்ப முடியவில்லை.. மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு நீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும் தண்ணீர் எங்க போகுதுன்னே தெரியல, இதுவரை கிணறு நிரம்பிய சரித்திரமே கிடையாது என்பதுதான் அதிசயம்

மேலும் இக் கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் இப்பகுதியை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், நிலத்தடி உப்புத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும் பயன்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த அதிசய கிணற்றை கேள்விப்பட்ட சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் சமீபத்தில் இந்த கிணற்றை நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து கிணறு நிரம்பாத காரணத்தை கண்டறிய சென்னை ஐஐடி குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பரிந்துரை செய்தார்.


இந்த பரிந்துரையை ஏற்று சென்னை ஐஐடியில் இருந்து பேராசிரியர்கள் வெங்கட் ரமணன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் இந்த அதிசயக் கிணற்றில் நேரில் ஆய்வு செய்து வந்தனர். அப்போது அவர்கள் அருகிலிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கிணற்றின் தன்மை குறித்தும், எத்தனை ஆண்டுகள் இதுபோன்று கிணறு நிரம்பாமல் இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் கிணற்றில் செல்லும் தண்ணீர் எங்கே செல்கிறது என்பது குறித்தும் பொது மக்களிடம் கருத்துக்களை ஐஐடி குழுவினர் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து அருகிலுள்ள மற்றொரு கிணற்றில் தண்ணீர் ஊற்று மூலமாக செல்கிறதா என்பதை ஆராய அந்த கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து ஐஐடி குழுவினர் இந்த கிணற்றை ஆய்வு செய்கின்றனர்.


இவர்களுடன் நெல்லை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பலரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கிணறு மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறுவதால் மேலும் கூடுதலாக தண்ணீரை இந்த கிணற்றுக்குள் திருப்பி விட்டு நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

எனவே ஐஐடி குழுவினர் ஆய்வு அறிக்கையின்படி இந்த கிணற்றை மேம்படுத்தி கூடுதலாக தண்ணீர் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. இதுவரை பல்வேறு ஆட்சியர்கள் நெல்லையில் இருந்த போதும் ஆயன்குளம் அதிசய கிணறு மீது யாரும் போதிய அக்கறை செலுத்தவில்லை. தற்போது ஆட்சியராக உள்ள விஷ்ணு இந்த கிணற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்த சில நாட்களிலே ஐஐடி குழுவினரை ஆய்வு செய்ய வைத்த சம்பவம் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த கிணற்றின் மீது தனி கவனம் செலுத்தி வீணாக கடலுக்கு செல்லும் உபரி நீரை ஆயன்குளம் அதிசய கிணற்றுக்குள் திருப்பி விட்டால், இப்பகுதியிலுள்ள விவசாய மக்கள் பயன்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடல் நீர்மட்டம் நிலத்தடி நீருக்குள் புகாமல் தடுக்கப்படும். உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாறும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த இடம் சுற்றுலாத்தலம் போல மாறிவிட்டது. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் தனக்குள் ஏற்றுக் கொள்ளும் இந்த அதிசய கிணற்றை பார்க்க, பல பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் ஊரில் அமைந்துள்ள மழை நீரை உள்வாங்கும் அதிசிய கிணற்றினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வி.அபூர்வா, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் பார்வையிட்ட போது. 


Tags:    

Similar News