ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப்பணி: அமைச்சர் தகவல்

கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-02 07:13 GMT

மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம் )

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. தமிழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து பணி வழங்கும் என்றும் தற்போது செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 13 பேரில் யாருக்கும் பிஎப்..7 தொற்று பாதிப்பு இல்லை' என்றார்.

Tags:    

Similar News