ஓய்வு பெற்ற தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

ஓய்வு பெற்ற தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-11-17 14:21 GMT

பைல் படம்.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு பயனாளர் பங்களிப்புத் தொகையான 13 கோடியே 46 இலட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்நிறுவனத்தில், தற்போது 3,569 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 23.05.2022 அன்று முதல்வர் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாகவும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தை இலாபம் மற்றும் உறுதித் தன்மையுடன் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும் அப்போது முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்நிறுவனத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், ஊழியர்களின் ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் அனைத்து பணப்பலன்களையும் விடுவிப்பதற்கு

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ரூ.29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் 1,093 பேர் பலன் அடைந்துள்ளனர். தற்போது இக்கழகத்தில் 677 தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளைக் காலி செய்யாமல் உள்ள நிலையில், அவர்களது சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளை வழங்கிட  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும், சராசரியாக 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், பயனாளிகளின் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு, பணி நிறைவுறும் தருவாயில் உள்ள 573 வீடுகள், தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும். மேற்படி குடியிருப்புகளின் பயனாளர் பங்களிப்பு தொகையான ரூ.13.46 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

"தொண்டு செய்வாய் - துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே" என்பதை நெஞ்சில் நிலைநிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு, தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையின் மூலம் ஓய்வு பெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News