கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி... ஸ்டாலினால் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவாரா?
கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி... ஸ்டாலினால் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.;
கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி ஸ்டாலினால் மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக 'ஹாட் டாப்பிக்' ஆக பேசப்பட்டு வருவது மு.க. அழகிரி -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பற்றிய செய்தி தான்.
உதயநிதி -அழகிரி சந்திப்பு
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவும், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவருமான முன்னாள் மத்திய மந்திரி மு. க. அழகிரியை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறார்.
இந்த செய்தி படத்துடன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததும் அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவதற்கான 'கிரீன் சிக்னல்' வந்துவிட்டது அதன் தொடர்ச்சியாகவே முன்னோட்டமாக ஸ்டாலின் தனது மகனை அனுப்பி ஆசீர்வாதம் என்ற போர்வையில் சந்திக்க வைத்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் மீண்டும் அழகிரி?
இந்நிலையில் தி.மு.க.வில் அழகிரி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமானால் அழகிரி எதற்காக கட்சியில் இருந்து அதுவும் தனது இறுதி காலம் வரை கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியால் நீக்கம் செய்யப்பட்டார் என்ற பின்னணி மற்றும் அழகிரி தொடர்பான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.
இது அழகிரியின் வரலாறு
சரி இனி அழகிரி பற்றிய வரலாறு, எதற்காக அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் என்பதற்கான பின்னணியை பார்ப்போமா?
முதலில் அழகிரி எதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான முரசொலியின் மதுரை பதிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்காக அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கடந்த 1981ம் ஆண்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் தான் அழகிரி. கட்சியின் பத்திரிகை பணியோடு சேர்த்து அழகிரி தனது சாதுரியத்தால் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியையும் வளர்த்தார். இதன் காரணமாக கருணாநிதிக்கு அவர் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தென் மண்டல தி.மு.க. செயலாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
முட்டல் -மோதல் -உரசல்
மதுரைக்கு அழகிரி அனுப்பி வைக்கப்பட்ட போது மதுரையில் தி.மு.க.வின் ஜாம்பவான்களாக கருதப்பட்ட தா.கிருஷ்ணன், பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் போன்ற மூத்த முன்னோடிகள் கட்சியில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்களுடன் அழகிரிக்கும் அவரது ஆட்களுக்கும் அவ்வப்போது முட்டல், மோதல், உரசல்கள் ஏற்பட்டது உண்டு. இந்த மோதலின் உச்சகட்டமாக தான் தா.கிருஷ்ணன் நடை பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இதற்கும் அழகிரி தான் காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது ஆனால் அது உள் கட்சி விவகாரம் என்பதால் அப்படியே அமுங்கி போனது தா. கிருஷ்ணன் கொலை வழக்கு தொடர்பான வழக்கில் அழகிரி விடுதலையும் செய்யப்பட்டு விட்டார்.
பெருகிய ஸ்டாலின் செல்வாக்கு
இது ஒரு புறம் இருக்க மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் அழகிரியின் கை கட்சியில் ஓங்கி கொண்டே செல்ல அப்போது தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்தவரும், அழகிரியின் தம்பியுமான மு.க. ஸ்டாலின் சென்னை மற்றும் மத்திய மாவட்டங்களில் தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டார். ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை பெற்றார். ஆனால் அழகிரிக்கு இதுபோன்ற வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக கட்சியில் அழகிரி ஆதரவாளர்களுக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது அதிகார போட்டிகள் நடந்தது உண்டு. 2000 வது ஆண்டு தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. நியமனத்தின் போது அழகிரி முன்னிறுத்திய நபருக்கு வாய்ப்பு வழங்காமல் கருணாநிதி ஸ்டாலின் ஆதரவாளருக்கு வாய்ப்பளித்து விட்டார். இதன் காரணமாக அப்போதே அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே இலைமறை காயாக மறைமுக போர் தொடங்கியது. இவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல்களை கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி தலையிட்டு சமாதானம் செய்து வந்தார். இதன் காரணமாக வெளியில் அதிகம் அது பேசப்படவில்லை .ஆனாலும் கட்சிக்காரர்களுக்கு இடையே அதிகார போட்டி என்பது நன்றாக தெரிந்த கதையாக தான் இருந்தது.
தினகரன் நடத்திய கருத்து கணிப்பு
இந்த சூழலில் தான் 2007 ஆம் ஆண்டு தி.மு.க. ஆதரவு பத்திரிகையான தினகரன் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதில் தி.மு.க.வில் செல்வாக்கு ஸ்டாலினுக்கா, அழகிரிக்கா, கனிமொழிக்கா என ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி ,அதில் ஸ்டாலினுக்கு 70% ஆதரவு இருப்பதாக ஒரு புள்ளி வர கணக்கை வெளியிட்டது. இந்த புள்ளி விவரம் பற்றிக் கொண்டு எரிய போகிறது என அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தினகரன் அலுவலகம் எரிப்பு
இந்த கருத்து கணிப்பினால் அழகிரி கடும் கோபத்திற்கு ஆளானார். அழகிரியின் ஆட்கள் என்று கூறப்படுபவர்கள் மதுரை தினகரன் அலுவலகத்திற்கு தீ வைத்து கொளுத்தினார்கள். மதுரை நகரமே கலவரத்துக்குள்ளானது. தினகரன் அலுவலக எரிப்பு சம்பவத்தில் அதன் ஊழியர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக தினகரன் அதிபரான மாறன் குடும்பத்திற்கும் அழகிரிக்கும் இடையே மோதல் வெடித்தது. அழகிரியை கடுமையாக தாக்கி தினகரன் பத்திரிகை மற்றும் சன் டிவியில் செய்திகள் அச்சாகின. ஒளிபரப்பாகின. இந்த மோதல் கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
தலைமையுடன் நேரடி மோதல்
இப்படி அழகிரி ஏதாவது ஒரு வகையில் கட்சி தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். இந்த சூழலில் 2013 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கருணாநிதி தனக்கு பின்னால் கட்சியின் தலைவராக மு. க. ஸ்டாலினையே முன்னிலைப்படுத்த போவதாக கூறியிருந்தார். இது அழகிரிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அழகிரி மீண்டும் தலைமைக்கு எதிராக மாறினார். கருணாநிதி தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்தார்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி ஏற்படுத்த முயற்சித்த போது அழகிரி தெரிவித்த கருத்துக்கள் கருணாநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியதோடு கூட்டணி முறிவிற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் கருணாநிதி அழகிரி மீது கடும் கோபம் கொண்டார்.
கருணாநிதியால் நீக்கம்
இது போன்ற தொடர் காரணங்களால் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதாகவும் கூறி அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அழகிரியை நீக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் தி.மு.க. மீதான அழகிரியின் விமர்சனம் கடும் வேகமாக அதிகரித்தது. அவர் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார், பாரதீய ஜனதா கட்சியில் சேரப் போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. காலங்கள் ஓடின.
தலைவரானார் ஸ்டாலின்
கருணாநிதி 2018 ஆம் ஆண்டு மறைந்த பின்னர் ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதலமைச்சரானார். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பு விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் அழகிரி பங்கேற்கவில்லை. அத்துடன் ஸ்டாலின் உடல்நிலை பற்றி அழகிரி தெரிவித்து இருந்த ஒரு கருத்து அவர்களுக்குள்ளான பிரிவை மேலும் விரிவடைய செய்தது. இதனால் அண்ணன் தம்பிக்கு இடையான பகை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
அமைச்சர் உதயநிதி பதவி ஏற்பு விழா
இந்த சூழலில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற போது அழகிரி மகன் துரை அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தான் இப்போது உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். அத்துடன் அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அது கட்சியின் தலைமை முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீக்கப்பட்டவரை சந்திக்கலாமா?
பொதுவாக தி.மு.க. ,அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படுவது உண்டு. அது கட்சியில் இருந்து நீக்கப்படும் போதே அறிவிக்கப்படும். அந்த வகையில் தான் அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட போதும் அப்படித்தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அப்படி நீக்கம் செய்யப்பட்ட அழகிரியுடன் தான் தற்போது உறவு முறையில் முதல்வரின் அதாவது கட்சியின் தலைவரின் மகனே சந்தித்திருப்பது அவர்களுக்குள் குடும்ப பகை மறந்து ஒரு இணக்கமான சூழல் நிலவுவதை காட்டுகிறது.
ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வி
அழகிரியின் நீக்கத்திற்கு பின்னால் இவ்வளவு பின்னணி உள்ள சூழலில் அதாவது கருணாநிதியால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட ஒருவரை சகோதரர் என்பதற்காக ஸ்டாலின் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்வி ஆயிரம் மில்லியன் டாலர் கொஸ்டின் ஆக பார்க்கப்படுகிறது.
மீண்டும் சேர்க்க வாய்ப்பு?
ஆனாலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், கட்சியின் தென் மாவட்ட வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அழகிரி தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தால் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் அது வைக்கப்பட்டுஅழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் தெரிவித்தனர்.