அதிமுக பொன்விழா நிறைவு: மாவட்டந்தோறும் 3 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள்

அதிமுகவின் பொன்விழா நிறைவு நாள் பொதுக்கூட்டங்கள் வரும் 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-08 14:01 GMT

எடப்பாடிபழனிசாமி.

அதிமுகவின் பொன்விழா நிறைவு நாள் பொதுக்கூட்டங்கள் வரும் 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிக்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவரைத் தொடர்ந்து, புரட்சித் தலைவி ஜெயலலிதா தனது உழைப்பையும், மதிநுட்பத்தையும் இந்த இயக்கத்திற்காக வழங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு, இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி, அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாற்றுச் சாதனைகளைப் பெற்றுத் தந்ததோடு, நம்மையெல்லாம் ஆளாக்கி, "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சூளுரைத்து, கழகத்தை நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இத்தகைய போற்றுதலுக்குரிய மாபெரும் மக்கள் பேரியக்கமாம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2022, 20.10.2022 மற்றும் 26.10.2022 ஆகிய மூன்று நாட்கள், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா" நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2022 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில், கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதன் விபரங்களையும், கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் குறித்த விபரங்களையும்; அதே போல், தங்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் விபரங்களையும் தலைமைக் கழகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News