சென்னை,கோவை, ஓசூரை தொடர்ந்து பெரிய தொழில் நகரமாகிறது தூத்துக்குடி

சென்னை,கோவை, ஓசூரை தொடர்ந்து பெரிய தொழில் நகரமாக தூத்துக்குடி மாறி வருகிறது.

Update: 2024-04-05 14:18 GMT

வின்பாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்த காட்சி (கோப்பு படம்)

சென்னை, கோவை, ஓசூர் ஆகியவை ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாகத் தூத்துக்குடியை இதுபோல டெலவப் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் இருப்பது அனைவருக்குமே தெரியும். நாட்டின் தலைசிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல இங்கே தங்கள் தொழிற்சாலைகளை வைத்து இருப்பது இதற்குச் சாட்சி.

அதேநேரம் தென்தமிழகத்திற்கு இதுபோன்ற பெரிய தொழிற்சாலைகள் வருவதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் முதலீட்டாளர் மாநாட்டில் வின் ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் முதலீடு செய்யும் என அறிவிக்கப்பட்டது. வின்பாஸ்ட்: தூதத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே வரும் காலத்தில் ஆட்டோமொபைல் முதலீடுகளுக்குச் சாதகமான ஒரு சூழலை அப்பகுதியில் உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தூத்துக்குடியில் புதிதாக ஒரு ஆட்டோ மொபைல் தொழிற்சாலை கிளஸ்டரை உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன் கூறுகையில், "வாகனத் துறையில் சென்னை மிகப் பெரிய கிளஸ்டராக இருக்கிறது. இங்கே ஏகப்பட்ட தொழிற்சாலைகள் கொட்டி கிடக்கிறது. அடுத்து கோவை, ஓசூர் ஆகிய இடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்து நான்காவது கிளஸ்டராக தூத்துக்குடியை அரசு உருவாக்கி வருகிறது. முதலில் இப்போது வின்பாஸ்ட் வரும் நிலையில், விரைவில் மற்ற நிறுவனங்களும் இங்கே முதலீடு செய்யும். இதன் மூலம் இங்கு அடுத்த ஆட்டோமொபைல் கிளஸ்டர் உருவாகும்" என்றார்.

வியட்நாமை சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் ஒரு புதிய ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுகிறது.அடுத்த 5 ஆண்டுகளில் அங்கு நிறுவனம் 4000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டதாக இது இருக்கும். இது தவிர மின்சார வாகன பேட்டரி மற்றும் வாகன சோதனைக்கு மேலும் இரண்டு மையங்களை அமைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

தமிழக அரசு மின்சார வாகன நிறுவனங்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் என மின்சார கார்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழகத்தில் உருவாக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இது மட்டுமின்றி மின்சார கருவிகள் மறுசுழற்சி மையங்களை நிறுவனமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.

பலரும் இதற்கு ஆர்வமும் காட்டி வரும் நிலையில், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் இதற்கான பணிகள் தொடரும் எனத் தெரிகிறது. இதன் மூலம் உள்ளூரில் இருந்தே கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் இரட்டிப்பாகும் எனக் கூறப்படுகிறது. வரும் காலத்தில் மின்சார வாகனங்கள் தான் அதிகரிக்கும் என்பதால் மின் தேவையும் கூட பல மடங்கு அதிகரிக்கும். இதனால் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் தேவையான யுக்திகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு விவாதித்து வருவதாகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறைச் செயலாளர் அருண் ராய் தெரிவித்துள்ளார். இப்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மின்சார வாகன துறையிலும் இதைத் தக்க வைக்கத் தமிழகம் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே இப்போது தூத்துக்குடியை உருவாக்குகிறார்கள்.

Tags:    

Similar News