சென்னை ஐஐடியில் முன் வேலைவாய்ப்புகள் அதிகரித்து சாதனை
சென்னை ஐஐடியில் 2022-23ம் ஆண்டிற்கான முன் வேலைவாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் 2022-23ம் ஆண்டிற்கான முன் வேலைவாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மாணவர்கள், 2022-23ம் கல்வி ஆண்டில் மிக அதிக அளவில் முன் வேலைவாய்ப்புகளைப் பெற்று சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்து உள்ளனர். வலுவான கோடைக்கால உள்ளகப் பயிற்சி ஒன்றை இக்கல்வி நிறுவனம் முற்றிலும் ஆஃப்லைன் முறையில் நடத்தியது. தொழில்துறையினரையும் மாணவர்களையும் நேரடியாக இணைக்க இந்த முயற்சி உதவியதுடன், முன் வேலைவாய்ப்பு (PPOs) எண்ணிக்கையையும் உயர்த்தியது.
2021-22ல் மொத்தம் 231 ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மட்டுமே முன்வேலைவாய்ப்புகளை (Pre-Placement offers) பெற்றிருந்த நிலையில், 2022-23 கல்வியாண்டில் ஏறத்தாழ 333 பேருக்கு (13 நவம்பர் 2022 நிலவரப்படி) இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. முதல்கட்ட வளாக வேலைவாய்ப்பை 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அதுவரை முன்வேலைவாய்ப்புக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த அளவிற்கு முன்வேலைவாய்ப்புகளின் செயல்திறன் இருப்பதற்கு இக்கல்வி நிறுவனத்தின் உறுதியான உள்ளகப் பயிற்சித் திட்டம் முக்கிய காரணியாக விளங்குகிறது. மாணவர்கள் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து முன்வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருந்து வருகிறது. உள்ளகப் பயிற்சி காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால்தான் முன்வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது.
முன்வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கான காரணிகளை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (வேலைவாய்ப்பு) பேராசிரியர் சத்யன், "இந்த ஆண்டு பிபிஓ-க்கள் (முன்வேலைவாய்ப்பு) அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சியை அளித்து அவர்களின் திறனை மதிப்பிடும் வகையில் நீண்டகால நேர்காணல் நடைமுறையை மேற்கொள்ளவும், முன்வேலைவாய்ப்புகளை வழங்கவும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். மாணவர் ஒருவருக்கு நிறுவனம் அளிக்கும் முன்வேலைவாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நிறுவனத்துடன் நீண்டகாலத்திற்கு நல்லதொரு தொடர்பு ஏற்பட வழிவகுக்கும்" என்றார்.
வளாக வேலைவாய்ப்புகளுக்கு உள்ளகப் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (உள்ளகப் பயிற்சி) பேராசிரியர் பி.முருகவேல், "மாணவர்கள் தாங்கள் கற்றறிந்த திறன்களை வெளிப்படுத்தவும், தாங்கள் விரும்பும் திறமையான மாணவர்களை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கவும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ன் உள்ளகப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதும், நடப்பாண்டில் முன்வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
அண்மைக் காலங்களில் ஐஐடி மெட்ராஸ்-ல் பெறப்பட்ட முன்வேலைவாய்ப்புகள் (PPOs)
ஆண்டு | 2016-17 | 2017-18 | 2018-19 | 2019-20 | 2020-21 | 2021-22 | 2022-23 |
PPOs | 73 | 114 | 135 | 170 | 186 | 231 | 333* |
முன்வேலை வாய்ப்பு -2022
குவால்காம்- 19
ஹனிவெல்- 19
மைக்ரோசாப்ட் - 17
கோல்ட்மேன் சாக்ஸ்- 15
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்- 14
ஆரக்கிள் - 13