பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் அதிமுகவினர் அமளி: வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின் போது பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். முன்னாள் முதலமைச்சர்களாக இருந்து கொண்டு, பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபடலாமா என்று, அவர்களை நோக்கி சபாநாயகர் கேள்வி எழுப்பினார். அமளியில் ஈடுபடாமல், அவையில் பட்ஜெட் உரையை கேட்கும்படி, அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார்.
எனினும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் சோதனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, அதிமுகவினர், அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களின் பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையடுத்து, பட்ஜெட்டுக்கு முன்பாக பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதன் பின்னர் பட்ஜெட் உரையை, நிதி அமைச்சர் தொடர்ந்து வாசித்து வருகிறார்.