அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு அனுமதிக்க கூடாது: காவல்துறையில் ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை மனு
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதிக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே தலைமை பதவி விவகாரத்தில் இடைப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்னும் பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்க இடைப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அறவே மறுத்துவிட்டனர். இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தில், பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு காவல்துறையினர் அனுமதி தரக்கூடாது. இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், கட்சி தொண்டர்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளதால், கூட்ட அனுமதியை மறுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அ.தி.மு.க., பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி, சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான சூழலில், சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் விளக்கம் கேட்டனர். இதனால் அப்பகுதி அ.தி.மு.க தொண்டர்கள் இடையே பரபரப்பு நிலவியது.