அ.தி.மு.க., விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரும் மனு: உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
அ.தி.மு.க., கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரிய மனு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா திடீர் மறைவு, அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து இடைப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பை ஆட்சியில் ஏற்றார். அ.தி.மு.க கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு ஒன்றில், அ.தி.மு.க கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தவுள்ளார்.