அதிமுகவின் முதல் எம். பி காலமானார்: அதிமுகவினர் அதிர்ச்சி!
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான மாயத் தேவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டில் அதிமுகவை தொடங்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார் . மிகப்பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்கு தள்ளி இந்த தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத் தேவர் பெரும் வெற்றி பெற்றார்.
அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்த தேர்தலில் தான் களம் இறங்கியது. இந்த தேர்தலில காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பலத்துடன் களமிறங்கிய எம்ஜிஆர் என்ற பெயரே மாயத்தேவருக்கு வெற்றியைத் தேடி தந்தது. இதனால் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மாயத்தேவருக்கு உண்டு.
அன்று முதல் இரட்டை இலைச் சின்னம் அதிமுகவின் சின்னம் ஆகிவிட்டது . அதன் பின்னரும் மாயத்தேவர் மூன்று முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சின்னாளபட்டியில் வசித்து வந்தார் இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மாயத்தேவர் இன்று காலமானார்.
அவர் காலமானதை அடுத்து, ஓபிஎஸ் மகனும், எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ''கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதன் முதலில் வெற்றி பெற்ற முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஐயா கே.மாயத்தேவர் அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.