மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி? ஏற்க மாட்டோம் -முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் -முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம். அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம், என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.