ஏ.சி. பயன்படுத்துவோர் மின் கட்டணம் எகிறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

ஏ.சி. பயன்படுத்துவோர் மின் கட்டணம் எகிறாமல் பார்த்துக்கொள்வது எப்படி? என்பது பற்றி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2024-03-03 17:07 GMT

ஏசியை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதால் மட்டும் மின்சாரத்தை சேமிக்க முடியாது என்றும் ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் மறக்காமல் ஆஃப் செய்தால் மட்டுமே மின்சாரத்தை சேமிப்பதோடு, அதிக மின் கட்டணத்தையும் தவிர்க்க முடியும் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. வெயில் காலத்தில் ஃபேன், ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக வீடுகளில், அலுவலகங்களில் இயக்கப்படும் என்பதால் கூடுதலான மின் நுகர்வு என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் மின் நுகர்வை எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் தயாராக உள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மே மாதத்தில் அதன் அளவு இன்னும் கூடி 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது, தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் வகையில் இரவு பகலாக தடையின்றி மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விழிப்புணர்வு பதிவுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஏசியை ஆஃப் செய்யும் போது வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆஃப் செய்யாமல் ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் மறக்காமல் ஆஃப் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலமாக தான் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அதிக மின் கட்டணத்தை தவிர்க்க முடியும் எனவும் அலர்ட் செய்துள்ளது.

நம்மில் பலரும் ஏசி ரிமோட்டில் டைமர் செட் செய்து விட்டு தூங்கி விடுகிறோம். குறிப்பட்ட நேரம் வந்த பிறகு ஆட்டோமெட்டிக்காக ரிமோட் மூலம் ஏசி ஆஃபாகிறது. இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்பதை போல் ஏசி ஓடிக்கொண்டே இருந்திருக்கலாம். சங்கடம் பார்க்காமல் எழுந்து ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆஃப் செய்தால் மட்டுமே கரண்ட் பில் எக்கச்சக்கமாக வருவதிலிருந்து தப்பிக்க முடியும். அரசு என்னதான் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நம்மில் ஒவ்வொருவரும் மின் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே கோடைக்காலத்தில் தடங்கலின்றி மின்சாரம் பெற முடியும். அதேபோல் தேவையற்ற அலங்கார விளக்குகள், தோட்டங்களில் பயன்பாடுக்கு அதிகமாக ஆழ்துளை மோட்டார்களை இயக்குதல் உள்ளிட்டவைகளை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.

Tags:    

Similar News