1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை, 2பேர் கைது

மதுரையில் இருந்து காரில் கடத்தப்பட்டு, தென்காசி அருகில் மர்ம நபர்கள் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

Update: 2021-10-25 03:14 GMT

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ் கமால். இவர் மதுரையில் ஜிகேர் கிரிப்டோ கரென்ஸி கிரீன் டெக் என்னும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் பிட்காயின் என்னும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரு மடங்காக லாபத்தை பங்கிட்டு தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் நாட்கள் ஆகியும் அவர் பணம் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் முகமது அனிஸ் கமால் 1000க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முகமது அனிஸ் கமால் சில தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து ஜாமினில் வெளி வந்துள்ளார். அவரை கடந்த 19ஆம் தேதியன்று காலை அவரால் பாதிக்கப்பட்ட சில மர்ம நபர்கள் மதுரை எஸ்.எஸ்.காலனியில் இருந்து காரில் கடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் தனது கணவரை காணவில்லை என முகமது அனிஸ் கமாலின் மனைவி மதுரை எல்லீஸ் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மதுரையில் இருந்து காரில் கடத்தப்பட்ட முகமது அனீஸ் கமால் தென்காசி அருகே உள்ள ஓரிடத்தில் வைத்து மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் பலத்த படுகாயமடைந்து உயிருக்கு போராடி உள்ளார் முகமது அனீஸ். எங்கே கொலை குற்றம் ஆகி விடுமோ என பயந்த மர்ம நபர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

தென்காசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் முகமது அனீஸ் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து முகமது அனீஸ் கமாலின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் இருந்து முகமது அனீஸ் கமாலை காரில் கடத்தி வந்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அசாரூதீன் என்பவர் சங்கரன்கோவில் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த கொலை வழக்கில் இன்னும் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சரணடைந்த அசாரூதீன் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஏர்வாடியை சேர்ந்த பக்ருதீன் என்பவரை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொலை குற்ற சம்பலத்தில் தொடர்புடைய ஆறு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

பிட்காயின் மோசடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி கையாடல் செய்த ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags:    

Similar News