போராட்டத்தை கைவிடுங்க: அரசு ஊழியர்களுக்கு தங்கம் தென்னரசு வேண்டுகோள்
போராட்டத்தை கைவிடுங்க என அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
அமைச்சர் தங்கம் தென்னரசு.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அவர்கள் தங்களது போராட்டத்தை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். முத்தமிழறிஞர் கருணாநிதி வழி நடக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் நடக்கும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 01.07.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிவலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்த ஆணையிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த காலங்கள் மற்றும் தற்கால பணிநீக்க காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அரசு பணியாளரின் பணிவரன் முறை செய்யப்படுவதை கருத்தில் கொள்ளாமல் பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு (பார்வை திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, லோக்கோமோட்டர் குறைபாடு) போக்குவரத்து படி ரூ.25000 ஆக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஓய்வூதியர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு 2021-22ம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23ம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்ப பாதகாப்பு நிதித் திட்டத்திற்கு சிறப்பு நிதியை அரசு வழங்கி உள்ளது. மேலும் நிலுவையில் விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் ரூ.25 கோடி சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்கள பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.100 கோடி கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது. எனவே இந்த சூழ்நிலையில, அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.