மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை: மறுபடியும் முதல்ல இருந்தா?

ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த, திட்டங்களை மறுபடியும் தூசி தட்டி எடுத்து மறுபடியும், மறுபடியும் இழப்பை உருவாக்குவதில் ஆவினுக்கு ஈடுஇணை கிடையாது;

Update: 2022-08-07 03:29 GMT

வெள்ளிக்கிழமை (05.08.2022) சென்னையில் நடைபெற்ற ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் "தமிழ்நாடு முழுவதும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனையை அறிமுகப்படுத்த வேண்டும்" என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் விரைவில் அந்த திட்டத்தை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இது ஒன்றும் புதிய திட்டம் இல்லை. ஆவின் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள அல்லது ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த பழைய திட்டம் தான். அதையே மறுபடியும் தூசி தட்டி எடுத்து அதற்கு புதிய திட்டங்கள் போல் முலாம் பூசி அதனை மீண்டும் அமுல்படுத்தி மறுபடியும், மறுபடியும் இழப்பை உருவாக்குவதில் ஆவினுக்கு நிகர் ஆவின் தான்.

ஏனெனில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ள மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டம் என்பது கடந்த ஆட்சியில் இரண்டு முறை துவக்கி வைக்கப்பட்டு, நடைமுறையில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான்.


அந்த திட்டத்திற்காக ஆவினில் இருந்து மிதிவண்டிகள், ஆட்டோ, மினி டெம்போ வேன் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் வாங்கப்பட்டது. ஆனால் அந்த வாகனங்களில் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் முகவர்களுக்கு போதிய லாபம் இல்லாததால் செலவினங்களைக் கூட ஈடுசெய்யும் அளவிற்கு ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை மூலம் வருவாய் கிடைக்காததாலும், பல்வேறு காரணங்களால்களால் உருகிப் போகும் ஐஸ்கிரீமினால் ஏற்படும் இழப்புகளை ஆவின் நிர்வாகம் ஈடு செய்யாததாலும் அந்த திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வியடைந்தது

அதற்காக இரண்டு முறை வாங்கப்பட்ட வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் நீண்ட காலமாகவே ஆவின் அலுவலகங்களில் மழையிலும், வெயிலிலும் போடப்பட்டு அவை துருப்பிடித்து வீணாகி ஆவினுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தியது தான் மிச்சம்.

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அமுல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த ஒரு திட்டத்தை இதுவரை இல்லாத புதிய திட்டம் போல் காட்டி அதனை இனிமேல் தான் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவது என்பது ஆவினுக்கு மறுபடியும் இழப்பை ஏற்படுத்த ஆவின் நிர்வாகமும், அமைச்சரும் முடிவு செய்துள்ளனரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது

ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்களை மீண்டும், மீண்டும் அறிமுகம் செய்யாமல் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது

Tags:    

Similar News