மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சலூன் கடைக்காரர்

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தும் இளைஞர் பங்கேற்றார்.;

Update: 2023-05-05 10:03 GMT

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சலூன் நடத்தும் இளைஞர் பொன் மாரியப்பன்.

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் மாரியப்பன். சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த பொன் மாரியப்பன், கடந்த 2014 ஆம் ஆண்டு மில்லர்புரம் பகுதியில் சலூன் கடை ஒன்றை தொடங்கினார். தனது சலூன் கடைக்கு சிகை அலங்காரம் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரங்களில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த தனது சலூன் கடையில் பல்வேறு விதமான புத்தகங்களை அவர் வாங்கி வைத்தார்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாசிப்பு பழக்கத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தி வருகிறார். மேலும், இவரது கடைக்கு வரும் குழந்தைகள் புத்தகங்களை வாசித்தால் அவர்களுக்கு கட்டண சலுகையில் சிகை அலங்காரம் செய்யும் பணியிலும் பொன் மாரியப்பன் ஈடுபட்டு வருகிறார்.

இவரது ஆர்வத்தை பார்த்து பல்வேறு எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் மற்றும் பொதுமக்கள் இவரது கடைக்கு பல்வேறு விதமான நூல்களை இலவசமாக வழங்கினர். பொன் மாரியப்பன் கடையில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க முயற்சி எடுத்துவரும் பொன் மாரியப்பனை கடந்த 25-10-2020 ஆம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவரது முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தனது 70 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பன் சலூன் நூலகம் குறித்தும் பெருமையாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த 26/4/2023 அன்று நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடியை சேர்ந்த சலூன் நுலகர் பொன் மாரியப்பனுக்கு பிரதமர் அலுவலகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 26-4-23 அன்று சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லியில் நடைபெற்ற விழாவிற்கு சென்ற பொன் மாரியப்பனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் விருதை வழங்கி கௌரவித்தனர். பின்னர் சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனுக்கு தமிழக ஆளுநர் ரவி விருதை வழங்கி கௌரவித்தார்.

இதுகுறித்து சலூன் நூலகர் பொன் மாரியப்பன் கூறியதாவது:

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் சார்பில் தான் கலந்து கொண்டு விருது வாங்கியதும் டெல்லிக்கு விமான மூலம் சென்று அங்கு பல்வேறு பகுதிகளை பார்வையிட்டதும் தனக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு. பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் காத்திருக்கும் நேரங்களில் அந்த பகுதிகளில் நூலகம் அமைப்பதே தனது லட்சியம் என பொன் மாரியப்பன் தெரிவித்தார்.

Tags:    

Similar News