அடுத்த தாக்குதல்- கருப்பு பூஞ்சை - ஆயத்தம் ஆவோம் -வைகோ
கொரோனா மருத்துவம் செய்து நலம் பெற்று வந்தவர்களை,கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று தாக்குகிறது.
தமிழகத்தில் அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சை தான் அதற்றகாக ஆயத்தம் ஆவோம் என வைகோ அறிக்கை வெளிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன. மராட்டிய மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள்; தில்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது.
கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கனவே இனிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள்.
கொரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள்.
எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, வாய் மூக்கு மூடிகளை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி குத்திக் கொள்ளுங்கள்; அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம் என தெரிவித்துள்ளார்
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை - 8
20.05.2021