மெரினா கடற்கரையில் ஒரே வாரத்தில் உடைந்த மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை

சென்னை மெரினா கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை ஒரே வாரத்தில் சேதமடைந்தன.

Update: 2022-12-09 05:41 GMT

மெரினா கடற்கரையில் ஒரே வாரத்தில் உடைந்த மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தரப் பாதை திறந்துவைக்கப்பட்ட பாதை ஒரே வாரத்தில் உடைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடந்த 27ம் தேதி திறந்து வைத்தனர்.

இந்தப் பாதையானது 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டர் நீளத்தில், 6 மீட்டர் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையானது சிகப்பு மெரண்டி, வேல மரம் மற்றும் பிரேசிலின் வகை மரங்களால் ஆனது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவர்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை மாண்டஸ் புயல் காரணமாக நேற்றிரவு வீசிய காற்றில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. உடைந்த இந்த மரப்பாதையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் செய்தியாளர்களிட் தெரிவித்தார்.

Tags:    

Similar News