தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆறு மாதங்களுக்கு பின் தேர்தல் நடத்த அவகாசம் அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-04-28 12:47 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தகுதியில்லாத பலர், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக அவசர கதியில் சேர்க்கப்பட்டதாகவும், தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த மற்றும் தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி, திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயரை நீக்கி, தகுதியான உறுப்பினர்களை சேர்த்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தி அனுப்பும்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், குறைபாடுகளை நீக்காமல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, உறுப்பினர் பட்டியல் திருத்தம் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது என்றும், இதுகுறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

அதை பதிவு செய்து கொண்டு, உறுப்பினர் பட்டியலை திருத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதன் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News