விதியை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 பள்ளிகள்: தணிக்கைத் துறை அறிக்கை

தமிழ்நாட்டில் 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-22 11:30 GMT

பைல் படம்.

2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடு குறித்த இந்திய தணிக்கைத் துறை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. அதில் தணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்ட 108 அரசுப் பள்ளிகளில் 48 பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள், அறிவியல் ஆய்வகங்கள், சுற்றுச் சுவர் போன்ற வசதிகள் அரசுப் பள்ளிகளில் போதுமானதாக இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020 -21 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காமலேயே 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களும் போதுமான அளவில் இல்லை என்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மடிக்கணினி, காலணிகள், பைகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பலன் கிடைக்கவில்லை என்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News