48 ஆண்டுகள் பழைமையான அரசு ஊழியர் கையேடு: புதுப்பிக்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு
48 ஆண்டுகள் பழைமையான அரசு ஊழியர்களுக்கான நடைமுறைக் கையேட்டை புதுப்பித்து வெளியிட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்;
48 ஆண்டுகள் பழைமையான அரசு ஊழியர்களுக்கான நடைமுறைக் கையேட்டை புதுப்பித்து வெளியிட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டிக்கு எழுதிய கடிதம்: அரசுத் துறைகளில் புதிதாகச் சேரும் அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட அலுவல் கையேடு அவசியமானதுடன், அத்தியாவசியமானதாகும். இந்தக் கையேட்டில் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியருக்கும் வழிகாட்டி முறைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும். அரசு ஊழியர்களுக்கான நடைமுறைக் கையேடு கடந்த 1973-ஆம் ஆண்டு கடைசியாக புதுப்பித்து வெளியிடப்பட்டது. அதன்பிறகு இதுவரை அதனை புதுப்பித்து வெளியிடவேயில்லை.
எனவே மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க உரிய நடவடிக் கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், புதிதாகப் பணியில் சேரக் கூடிய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது பணியின் தன்மைகளைப் புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிடமுடியும். இந்த கையேட்டை புதுப்பிக்கும் பணியில் வருவாய்த் துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணியில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை முழுமையாக அளிப்பதற்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் தயாராக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாவட்ட கையேட்டை புதுப்பித்து அளிக்க வேண்டும், என கூறியுள்ளார்.