தாயை கொன்ற வழக்கில் மகனுக்கு 40 ஆண்டு சிறை: புதுகை கோர்ட் தீர்ப்பு
தாயை எரித்து கொலை செய்த வழக்கில், மகனுக்கு 40 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதந்தலை பகுதியைச் சேர்ந்த லீலாவதி வயது 55 இவருடைய மகன் சந்தோஷ் வயது 26 . இவர் வீட்டில் அடிக்கடி தாய் லீலாவதியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
கடந்த 31. 8. 2021 அன்று சந்தோஷ், தாய் லீலாவதியிடம் செலவுக்கு பணம் கேட்டும் தராத ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். தீ பிடித்து எரிந்த நிலையில் தாய் வீட்டின் வெளியே ஓட முயன்றபோது இறுக்கி கட்டிப்பிடித்து இரண்டு பேரும் தீயில் எரிந்து உள்ளனர்.
உடனடியாக இரண்டு பேரும் தீயில் எரிந்து கொண்டிருந்தது பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். லீலாவதி 60% தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, இறந்தார். இதையடுத்து, சந்தோசை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகன் சந்தோஷுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் ஆயுள் தண்டனையில் 40 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டும்; சிறையில் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.