3வது அலை எச்சரிக்கை - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்
பள்ளிகள் திறப்பது அவசியம், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது -சௌமியா சுவாமிநாதன்.;
வரவிருக்கும் மூன்றாவது அலை தொற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது முக்கியமான ஒன்று என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஆனைகட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். பழங்குடியின மக்களின் உடல்நிலை, வாழ்வாதார சூழல் உள்ளிட்டவைகள் குறித்து அந்த மக்களிடமே கேட்டறிந்தார்.
பின்னர் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏழை மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றனர். ஒரு வேளை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியஅவர், மேலும் இருக்கக்கூடிய மக்களுக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி விட்டால் மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கலாம் பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதார முறைகளைக் கையாள்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட செயல் முறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அலை தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.