அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு;
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக, ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என நேற்று முன்தினம் அறிவித்தது.
இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.
மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில், வழக்கின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சொத்து குவித்து வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொன்முடி, அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.