ஒன்றாக இணையும் 3 பாசஞ்சர் ரயில்கள்: சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு
3 பாசஞ்சர் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது.;
தமிழகத்தில் தற்போது மயிலாடுதுறை -திருச்சி -மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் ())56113/56114 ),திருச்சி- கருர்-திருச்சி பாசஞ்சர் ரயில் (76833 /76834), சேலம் -கரூர் -சேலம் பாசஞ்சர் ரயில் (76802/ 76801)ஆகிய மூன்று பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் வழித்தடங்கள் மேம்பாடு மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த மூன்று ரயில்களையும் ஒன்றாக இணைத்து மயிலாடுதுறையில் இருந்து திருச்சி கரூர் வழியாக சேலத்திற்கு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
இந்த மூன்று ரயில்களும் தற்போது வெவ்வேறு நேரங்களில் அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணை படி இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூன்று ரயில்களையும் ஒன்றாக இணைத்து மயிலாடுதுறை- சேலம்- மயிலாடுதுறை என்ற புதிய பெயரில் இயக்குவதற்கான திட்டத்தை தெற்கு ரயில்வே தயாரித்து அதற்கான அனுமதியை மத்திய ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்று உள்ளது.
இந்த புதிய ரயிலானது சேலம்- மயிலாடுதுறை இடையே நாமக்கல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தனது ஓட்டத்தை விரைவில் துவங்க இருக்கிறது.
இந்த ரயில்கள் ஏற்கனவே எந்தெந்த ரயில்நிலையங்களில் நின்று செல்லுமோ அத்தனை ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 9.45மணிக்கு திருச்சி வந்து 10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். கரூருக்கு 12.03 மணிக்கு வந்து 12.05 மணிக்கு புறப்படும். மதியம் 1.45 மணிக்கு சேலத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் இந்த ரயிலானது சேலத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு 3.48 மணிக்கு வந்து 3.50 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு மாலை 5.55க்கு வந்து 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
ரயில்வே போர்டு அனுமதி வழங்கி விட்டாலும் இந்த ரயில் எந்த தேதியில் இயக்கப்படும் என்பதை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் தான் இதன் சேவை தொடங்கும். இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.