இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2024-04-11 07:04 GMT

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய தமிழக மீனவர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ராமேஸ்வரம் மேற்கோடுவை சேர்ந்த 9 மீனவர்கள் என 21 மீனவர்கள் கடந்த மாதம் 16ஆம் தேதி இரண்டு படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் காங்கேசன் துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இரண்டு படங்களில் சென்ற 21 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கைக்கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்தது. மீதமுள்ள இரண்டு பேரில் அந்தோணிசாமி என்பவர் இரண்டாவது முறையாக கைதானதால் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் படகு ஓட்டுநர் லோக்ஸ் என்பவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 19 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த 19 மீனவர்களையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் உணவு கொடுத்தும் வரவேற்றனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் 19 மீனவர்களையும் அரசு செலவில் அவர்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்பியதை கேட்டு அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News